கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் பகுதியில் உள்ள வெவ்ர்லி பகுதியில், 8 வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்துள்ளது அப்பகுதியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட்டில், தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்றது. சிறுமியின் தாய் கண்முன்னே நடந்த அந்த சம்பவத்தில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
அந்தச் சோகம் மறையாமல் இருக்க, இன்று மீண்டும் துயரம் நேர்ந்துள்ளது. வாட்டர் பால்ஸ் அருகே வெவ்ர்லி பகுதியில் வசிக்கும் நூர் இஸ்லாம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று சிறுவனை கவ்விக் கொண்டு சென்றது. இதனை அறிந்து கதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறையினர் தேடுதல் நடத்தி, வீட்டு அருகே உள்ள புதருக்குள் சிறுவனின் உடலை கண்டெடுத்தனர். மேலும் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறையில் தொடர்ந்து நடைபெறும் சிறுத்தை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களில் நடந்த சிறுத்தை தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பாகும். இந்தச் சம்பவங்கள், வால்பாறை மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பயத்தை அதிகரித்துள்ளன.