திருவண்ணாமலை, ஏப். 19- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள கிராம நிலங்களின் வழியாக தமிழ்நாடு தொடர் மின் கழகத்தால் வட சென்னையிலிருந்து அரியலூர் வரை உயர் மின் கடத்தும் கோபுரங்களின் மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. வந்தவாசி வட்டத்தில் உத்திரமேரூர் வட்டார முடிவிலிருந்து செஞ்சி வட்டம் தொடக்கம் வரை உள்ள கிராமங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வாச்சனூர், ஆலந்தாங்கல், சளுக்கை, ஓழப்பாக்கம், கொசப்பட்டு, வெண்குன்றம், மும்முனி, தெள்ளூர், மாம்பட்டு, தண்டலம், இளங்காடு, பொன்னூர், கீழ் புத்தூர், சிவனம், கல்பட்டு, சேனந்தல், பாச்சியை, ஆச்சமங்கலம், குணகம்பூண்டி, வொடால் ஆகிய கிராம நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சட்டப்படியான இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் பாதிக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு அரசாணைப்படி இழப்பீடு வழங்கப்படவில்லை. சட்டப்படியான இழப்பீடு வழங்கக் கோரி கடந்த மார்ச் 20ஆம் தேதி அச்சமங்கலம் கிராம கூட்டு சாலை அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம், வட்டாட்சியர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனவே முன்பு அறிவித்தபடி, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி வந்தவாசி வட்டாட்சியரிடம் செவ்வாயன்று (ஏப். 19) மனு அளித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், சிபிஎம் வந்தவாசி வட்டச் செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.