districts

img

வியாபாரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஜிஎஸ்டி மற்றும் வரிகள் உயர்வைக் கைவிடுக! ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஎம் வேண்டுகோள்!

திருப்பூர் மற்றும் அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வியாபாரிகள் நடத்தி இருக்கும் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்ந்த வர்த்தகர்களின் இந்த ஏகோபித்த உணர்வைப் புரிந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக அரசும்  வரிகளைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வணிக அடிப்படையிலான வாடகை கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், சிறு, குறு, நடுத்தர தொழில், வர்த்தக நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநில அரசின் உத்தரவு மூலம் மாநகராட்சி, நகராட்சிகளில் அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, நடப்பாண்டு வரியை அப்போதே செலுத்தாவிட்டால் அந்த வரியில் ஒரு சதவீதம் அபராதம், ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, அங்கீகாரக்கட்டணம் உயர்வு உள்ளிட்ட கடுமையான வரி உயர்வு ஆகியவற்றை மாநில அரசு கைவிட வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துப் பகுதி வியாபாரிகளும், வர்த்தகர்களும், முழுமையாக பங்கேற்ற கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை பெரும் எழுச்சியுடன் நடைபெற்று உள்ளது.

இந்தப் போராட்டத்தை அறிவித்து, அதில் முழுமையாக பங்கேற்ற அனைத்துப் பகுதி வியாபார பெருமக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

இந்த கடையடைப்பின் மூலம், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை சந்தித்து வரும் வர்த்தகர்கள், வியாபாரிகள், சிறு, குறு, தொழில் சார்பு நிறுவனங்கள் தங்கள் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.

ஒன்றிய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக அமல்படுத்தி வரும் கார்ப்பரேட் ஆதரவு தாராளமயக் கொள்கைகளே இந்த கடுமையான வரி உயர்வுகளுக்கு முக்கிய காரணமாகும். ஒன்றிய அரசு நேரடியாக ஜிஎஸ்டி வரி விதித்து நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதிக்குழு மானியங்கள் மற்றும் இதர நிதிப் பங்களிப்பை வழங்குவதற்கு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வரிகளை உயர்த்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதும் முக்கிய காரணமாகும்.

மேலும் ஜிஎஸ்டி வரி மூலம் அனைத்து சிறு, குறு தொழில்களை அழித்தொழிக்கும் ஒன்றிய அரசு, வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்வது, சாத்தான் வேதம் ஓதுவதாக, இரட்டை வேடம் போட்டு ஏமாற்றப் பார்க்கிறது. போராடும் அனைத்து தரப்பினரும் இதனை கண்டு ஏமாற மாட்டார்கள்.

அத்துடன் ஒன்றிய அரசின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து மாநில அரசு மக்கள் தலையில் சுமைகளை கூட்டும் வகையில் வரிகளை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்துவதை கைவிட வேண்டும்.

தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான, திருப்பூரை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் கடை அடைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ள இந்த உணர்வுகளை மதித்து, ஒன்றிய பாரதிய ஜனதா அரசும், மாநில திமுக அரசும் வரிகளைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.