districts

img

திருப்பூர்: ஜிஎஸ்டி, சொத்து வரி உயர்வு- ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு வர்த்தக ரீதியான வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி  விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசின் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகம் அபரிமிதமாக உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தியும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை புதன்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டம் திருப்பூர் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் நடைபெற்றது. உணவகங்கள், பேக்கரிகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், இதர வியாபார நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், காய்கறி மளிகை கடைகள் உட்பட சின்னஞ்சிறு பெட்டிக்கடைகள் வரை  அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், சிறு, குறு நடுத்தர வியாபாரிகள், தங்கள் கடுமையான கோபத்தை இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இந்த வரி உயர்வு கொள்கைக்கு எதிராக முன்னதாக போராட்டங்களை நடத்திய நிலையில் விவசாயிகளின் கடையடைப்புக்கும் முழு ஆதரவு தெரிவித்து இருந்தனர். வேறு பல தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அண்மை காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.