அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழமைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12,500 கன அடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில், 90 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அமராவதி அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து உடுமலை உள்ள அமராவதி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.