districts

img

“தலித் மக்களின் சுடுகாட்டு பாதையை மறிக்கும் சாதியம்”

திருப்பத்தூர், மார்ச் 6- திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டத்தில் உள்ளது வெள்ளை நாயக்கன்நேரி கிராமம். இங்கு, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த   35 குடும்பங்களும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களும் உள்ளன. தலித் மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த பாதையை மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர்  தனக்கு சொந்தமானது என்று வேலி அமைத்து விட்டார்.  இதனால், தலித் மக்கள் பயன்படுத்தும் பாதை 3 அடி ஒத்தையடி பாதையாக சுருங்கி விட்டது. இதனால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மறிக்கப்பட்டது. குறித்து  மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். மேலும் வேலி அமைக்கவும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு வந்த அரசு அலுவலர்கள், எழுதப் படிக்கத் தெரியாத  சில முதியோரிடம் பிரச்சனைக்குரிய இடத்தில்  வேலி அமைத்துக் கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை, நாங்கள் சுமூகமாக தீர்த்துக் கொண் டோம் என்று கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில், தலித் பகுதியை சார்ந்த அசோகன் (70) என்பவர்  உடல் நலக்குறைவால் மார்ச் 4 அன்று இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்வதற்கு வழியில்லாமல் தலித் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விசிக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வேலூர் மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சிவா, வாணியம்பாடி நகரச் செயலாளர் சுரேஷ், சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எம்.காசி,  சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேசவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ரவி ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்தனர். பிறகு நாட்றம்பள்ளி வட்டாட்சியர், மாவட்ட  காவல் துணை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆதிதிராவிடர் மக்களின் பயன்பாட்டி லுள்ள மூன்று அடி பாதையை 10 அடியாக விரிவுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.  புதிதாக பாதை அமைக்கும் வரை தற்போதைய பாதையை தலித் மக்கள் பயன்படுத்திக் கொள்ள எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில்  அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.