districts

சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம் அடிப்படை வசதிகள் இல்லை: சேதுபாவாசத்திரம் மக்கள் குமுறல்

தஞ்சாவூர், ஆக.27 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.  அப்போது சிபிஎம் நிர்வாகிகளிடம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்காடு ஊராட்சி செம்பருத்தி நகர் பொதுமக்கள் தாங்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி 30 வருடங்களாக வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.  மல்லிப்பட்டினத்தில் இருந்து ரெண்டாம்புளிக்காடு செல்லும் வழியில், வாய்க்கால் ஓரத்தில், செம்பருத்தி நகர் என்ற இடத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிமனைப் பட்டா, மின்விளக்கு, சாலை, குடிநீர் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இராமேஸ்வரம் தனுஷ்கோடி தீவு இயற்கை பேரிடரில் அழிந்த பிறகு, இங்கு குடிபெயர்ந்தோம். எங்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ளது என்றாலும் மாவட்ட நிர்வாகம் எங்களை கண்டுகொள்ளவில்லை என்றனர் வருத்தத்துடன்.  அவர்களிடம் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, கிளைச் செயலாளர் சண்முகம் ஆகியோர், உங்கள் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற போராடுவோம் என ஆறுதல் தெரிவித்தனர்.  சுப்பம்மாள்சத்திரம், சம்பைபட்டினம், கழுமங்குடா, மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கமும், பெருமகளூரில் சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் தலைமையில் தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது.