தஞ்சாவூர், ஜூலை 19- சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழக அரசின் சார்பில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை, செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கூண்டு வரை ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் ஊர்வல மாக சென்றனர். பேரணியை ரோட்டரி துணை ஆளுநர் தாமஸ் ஆரோக்கியராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் அன்பு, டாக்டர் சதாசிவம், நெப்போலியன் மற்றும் மனோரா ரோட்டரி, கோட்டை ரோட்டரி, பட்டுக்கோட்டை ரோட்டரி பேராவூரணி ரோட்டரி, மிட் டவுன் ரோட்டரி, கிங்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள், தஞ்சை மாவட்ட சதுரங்கக் கழகம், தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் நிர்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அணைக்காடு சிலம்பக் குழு மாணவர்கள் பேரணிக்கு முன்பாக சிலம்பம் ஆடியவாறு சென்றனர்.