தாராபுரம் அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய எலக்ட்ரிஷனை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் தரப்பில் கூறியதாவது, தாராபுரம் அடுத்த சிக்கன்னாபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பூபதி(24) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் குண்டடம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றுள்ளார். அந்த உறவினருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வெளியில் சென்றதை அறிந்த பூபதி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த விபரம் பெற்றோருக்கு தெரிய வரவே பூபதியை கண்டித்துள்ளனர். அதனைதொடர்ந்து மாணவிக்கு சில தினங்களாக உடல்நிலை சரியல்லாமல் போனதால் மாணவியின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரணை செய்ததில் ராணவி உறவினர் பூபதி காரணம் என தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.