districts

img

கீழடியில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு!

கீழடி 10-ஆம் கட்ட அகழாய்வில் அதிகளவு சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருவதால் பண்டைய காலத்தில் குடியிருப்பு பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் முதல் நடந்து வருகிறது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு மீன் உருவ பானை, ஓடுகள், தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, சுடுமண் குழாய், பாசி மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

கீழடி அகழாய்வில் சுடுமண் பானைகள் சிறியதும், பெரியதுமாக கிடைத்துள்ளன. ஆனால், 10-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் ஒரே இடத்தில் கிடைத்து வருகின்றன. அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இப்பானைகளில் பண்டைய கால மக்கள் உணவிற்கு பயன்படுத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்தடுத்து சிறியதும், பெரியதுமான சுடுமண் பானைகள், குழாய்கள், சரிந்த கூரை ஓடுகள் வெளிவந்திருப்பதால் இந்த இடத்தில் குடியிருப்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளன.10-ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானைகள் ஒருசிலவற்றில் கலைநயம் மிக்க வட்ட கோடுகள் மற்றும் வடிவமைப்புகள் பானைகளின் கழுத்துப்பகுதி, கீழ்ப்பகுதியில் காணப்படுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.