எடப்பாடி அருகே திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு நேற்று மாலை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் (கொங்கணாபுரம் கிளைS351) முன்பு, 29 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரம் பருத்தி ஏலம் விட்டதில் 1 கிலோ பருத்தி ரூபாய் 14க்கு சென்றதாகவும், இந்த வாரம் ரூ.7க்கு குறைந்த விலைக்கு ஏலம் செல்வதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.