நாகர்கோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து, கிறித்தவ, முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் அலங்காரமணி அடித்தல், திருவிழாக்களின்போது சாலைகளில் நீண்டதூரம் ஒலிபெருக்கி பொருத்துவதை தடுக்கவும் வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளரிடம் இந்தியா கூட்டணி கட்சியினர் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சாதி, மத மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்ற சூழல் உள்ளது. அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே பகுதியில் பிரிவினை எண்ணம் இல்லாமல் வீடு கட்டி வாழ்கின்றனர். அவர்கள் தங்களது வழிபாட்டுத் தலங்களை அமைத்து வழிபடுகின்றனர். குறைந்த பொருட் செலவில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் காலப்போக்கில் மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்டு வருகின்றன. அதுபோல் திருவிழாக்களும் மிகச்சிறப்பாக பல லட்சம் ரூபாய் பொருட்செலவில் ஆடம்பரமாக கொண்டாடப்படுகின்றன. இது போட்டி பொறாமைகளுடன் மதவெறிக்கு வழிவகுத்துள்ளது. இதனால், சில கிலோ மீட்டர் தூரத்துக்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள், சக்தி வாய்ந்த பெட்டி வடிவ ஒலிபெருக்கிகளை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்துகிறார்கள். அதிகாலை 4 மணி முதல் கூம்பு வடிவ ஒலிபெருக்கி செயல்படுகிறது. இதனால் அதிகாலையில் ஆழ்ந்து படிக்கும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒலிக்கும் மின் கடிகார அறிவிப்பால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். 1982 ஆம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அமமன் கோவில் மாசிக்கொடை விழாவும், அங்கு கடற்கரை பகுதியில் உள்ள கிறிஸ்தவ குருசடி திருவிழாவும் சம காலத்தில் வந்ததால் சாலையில் இரு மதத்தினரும் போட்டிபோட்டு ஒலிபெருக்கி கட்டினார்கள். இதனால் ஏற்பட்ட தகராறு கலவரமாக மாறியதால் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற் பட்டது. அங்கு 7 நபர்களும் இதர பகுதிக ளில் 3 நபர்கள் என 10 உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மேலும் இந்த கலவரத் தால் காயமடைந்தவர்கள், பொருட் சேதம்அடைந்தவர்கள் ஏராளமானோர். சில நாட்கள் கன்னியாகுமரி மாவட்டம் கலவர பூமியாக காட்சியளித்தது. அதை உணர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் சில ஆண்டுகள் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தனிக்கவனம் செலுத்தி, மாவட்டம் முழுவதும் மத திருவிழாக்களில் ஒலி பெருக்கி வைப்பதில் சில கட்டுப்பாடு கள் விதித்து அதை நடைமுறைப்படுத் தின. இதனால் திருவிழாக்கள் சட்ட மீறல்கள் இல்லாமல் அமைதியாக நடந்தன. காலம் செல்ல செல்ல திரு விழாக்களை கண்காணிக்கும் கட மையில் இருந்து மாவட்ட நிர்வாகம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. The noice poliution (Regulation and central rules) பகலில் ஒலியின் அளவு 50 டெசிபல், இரவில் 45 டெசிபல் அளவுதான் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஒலிபெருக்களை வழிபாட்டு வளாகத்துக்குள் மட்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் நீண்ட தூரத்துக்கு அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் வைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் மோகன் குமார், குமரி மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் ஒய்.மரிய சிசுகுமார், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பினுலால்ஈ மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விசிக மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன் ஆகியோர் வழங்கினர்.