districts

img

தியாகிகளை பெருமைப்படுத்தும் அரசு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதம்

தூத்துக்குடி, செப்.12- எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆய்வு செய்தார். மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்படங்கள் மற்றும் மகாகவி பாரதியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார். மேலும், மகாகவி பாரதியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது குறிப்புகளைப் பதிவு செய்தார்.  அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கி.ராஜநாராயணனின் நினைவைப் போற்றும் வகையில், மின்னணு நூலகத்தில் அன்னாரது படைப்புகள் மற்றும் படங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கி.ராஜநாராயணன் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் புகைப்படங்கள் மற்றும் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டார்.      பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விடுதலைப் போர் தியாகிகளுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும், தியாகத் திருமக்களுக்கும் எழிலொழுகும் வடிவங்களில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலமாக பராமரிக்கப்படுகின்றன.  நம் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட வீரத் தியாகிகள், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுப் பெருமையினைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூக நீதி கருத்துக்களை விரைந்து வளர்த்த தலைவர்கள், கவிஞர்கள், இசை மேதைகள், இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டின் தியாகத் தலைவர்கள் முதலானோரின் நினைவுகளைப் போற்றி பெருமைப்படுத்திடும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச்சின்னங்கள், நினைவு வளைவுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ்மொழியின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நினைவுகளைப் போற்றுகின்ற வகையில் அவர்களுக்கெல்லாம் திருவுருவச் சிலைகளும், நினைவகங்களும் அமைத்து அரசு பெருமைப்படுத்தும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போ.முத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.