நாகர்கோவில், செப்.12- நாகர்கோவில் மாநகராட்சியில் நகர்புற வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் செயலாளர் மலைவிளை பாசி, பொருளாளர் குமரேசன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். சோதனை அடிப்படையில் மாவட்டத்திற்கு இரண்டு பேரூராட்சி வீதம் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் பேரூராட்சியிலும், நாக்கோவில் மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திலும் வேலை துவக்கப்பட்டது. 365 நாள் வேலையும், 300 ரூபாய் கூலியும் வழங்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் இந்த வேலையை விரவுபடுத்தி விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். இத் திட்டத்தில் சேரும் வேலையாட்களை சாக்கடை அள்ள கூறக்கூடாது. குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளை சுத்தம் செய்யும் வேலையை கொடுக்க வேண்டும் என பேசினர்.