சின்னாளபட்டி,செப்.15- திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பாரதியார் ஆய்வகத்தின் சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பாராட்டு விழா, பேராசிரியர் செ.போத்திரெட்டி நினைவு பாரதி ஆய்வு நூலகம் திறப்பு விழா, மகாகவி பாரதியார் 101ஆவது நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் பல்கலைக்கழக வெள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இணைய வழி நிகழ்வில் கலந்து கொண்ட காந்திகிராம பல்கலைக்கழகப் பொறுப்புத் துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையுரையாற்றினார்.புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் பா. இரவிக்குமார் பாராட்டிப் பேசினார். கவிஞர் சிற்பி பேராசிரியர் செ.போத்திரெட்டி நினைவு பாரதி ஆய்வு நூலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பாரதியார் ஆய்வக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா. ஆனந்த குமார் வரவேற்றார். பேராசிரியர் ஒ.முத்தையா நன்றி கூறினார்.