வேப்பனபள்ளி, செப். 15- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த மலைகிராமத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டும். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்த கிராமத்திற்கு சாலை இல்லாமல் இருந்தது. கிராம மக்கள் பல வருடங்களாக போராடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் முதல் முறையாக தார் சாலை அமைக்கப்பட்டது. மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. தார் சாலை அமைக்கும் போது, தாழ்வான பகுதிகளில் தரை மேம்பாலம் ஏதும் அமைக்கப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் மலையில் இருந்து வரும் நீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது. தண்ணீர் செல்ல வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீரில் தினசரி கிராம மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி கடந்து சென்று வருகின்றனர். தண்ணீர் வற்றாமல் சாலையில் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளனர். ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட காய்கறிகளை வாங்கக் கூட ஆபத்தான முறையில் தினசரி தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தாழ்வான பகுதிகளில், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மேம்பாலம் அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.