நாகர்கோவில், ஏப்.23- ஜி.எஸ்.டி. வரியில் பங்கு உட்பட தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொகையை ஒன்றிய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறினார். நாகர்கோவிலுக்கு சனிக்கிழமை வந்த கனிமொழி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் ஏற்படும்போது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் வழங்காமல் இருக்கிறார்கள். அடிப்படையாக தமிழகத்துக்கு வரவேண்டிய எதுவுமே வந்து சேர்வது இல்லை. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் இப்போது பெண்களுக்கான கல்வி உதவித்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக பெண்களுக்கு எதிரான திட்டம் அல்ல. பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டம். உயர்கல்விக்குச் செல்லும் பெண்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பெண்களின் கல்வி, பெண்களின் எதிர்காலத்தை இன்னும் சக்திவாய்ந்ததாக, கல்வி என்ற ஆயுதத்தோடு எதிர்த்து நிற்கும் விதமாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உயர்கல்விக்கு போகக்கூடிய மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கக்கூடிய திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.