கள்ளக்குறிச்சி,பிப்.6- கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கார் ஓட்டுநர் அவரது மகள் சவுந்தர்யா (20). கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கார் ஓட்டுநர் சுரேசுக்கு சரியாக வேலையில்லை. இந்தநிலையில், கள்ளக்குறிச்சியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு வேலை வேண்டும் என சவுந்தர்யா கூறியுள்ளார். அப்போது செல்போனில் பேசிய ராஜேஷ் என்பவர் தங்களுடைய ஆதார் கார்டு, போட்டோ, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கச்சிராய பாளையம் சாலையில் உள்ள அலுவலக முகவரிக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய கல்லூரி மாணவி அங்கே சென்றார். அப்போது அங்கு இருந்த ராஜேஷ் தன்னை மேலாளர் என்றும், திலீப் குமார் உதவி மேலாளர் என்றும் கூறியதாகவும் மேலும் ரூ. 5 ஆயிரம் கட்டினால் அதற்கு ஏற்றவாறு வீட்டு உபயோக பொருட்களை தருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதேபோல், பொருட்களை வாங்க ஆட்களை அழைத்து வந்தால் ஒவ்வொரு நபருக்கும் ரூ. 300 கமிஷன் தருவ தாக கூறியுள்ளார்.
இதனை ஏற்று சவுந்தர்யா ரூ. 5000 பணம் கட்டி கட்டி உள்ளார். மறுநாள் பொருட்களை வாங்க அலுவலகத்துக்கு சென்றபோது அலுவ லகம் பூட்டப்படும் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்து தன்னை ஏமாற்றிய நபர்களாக இருக்கலாம் சந்தேகம் அடைந்த அவர் அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த நபர் வரசொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் தன்னை ஏமாற்றிய ராஜேஷ், திலீப்குமார் என தெரியவந்தது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. பிறகு, இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து ள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் இந்த இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.