கடலூர், ஏப். 6- கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் டாக்ரோஸ் நிர்வாகம் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்காமல் ஒரு வருடமாக காலம் கடத்தும் நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பேச்சுவார்த்தை துவக்க கோரியும் சிஐடியு சார்பில் முதுநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. மிகை நேர பணிக்கு சட்டப்படி வழங்கி வந்த இரட்டிப்பு சம்பளத்தை மீண்டும் வழங்க வேண்டும், கூடுதல் உழைப்பு செலுத்தி உற்பத்தியை பெருக்கியதற்காக வழங்கி வந்த 2 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும், தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தினால் குற்றப்பத்திரிகை கொடுப்பது, தற்காலிக பணி நீக்கம் செய்வது போன்ற மிரட்டும் போக்கை கைவிட வேண்டும், கடந்த 20 ஆண்டுகளாக நடை முறையில் உள்ள 10 நிமிட கருணை நேரத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் பி.கருப்பையன், இணைச் செயலாளர் வி.திருமுருகன், ஏ.பாபு, மாவட்ட துணை தலைவர் வி.சுப்பு ராயன், மாவட்டக் குழு உறுப்பினர் சிவானந் தம், பி.குமார், சங்க நிர்வாகிகள் ஆர்.முரளி தரன், கே.தனசேகரன், சிலம்பரசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.