கடலூர், ஏப். 17- கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்ட பின் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.