கட்டுமான பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கட்டுமானப் பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சட்டங்களை திருத்தி நலவாரியங்களை சீரழிக்கக்கூடாது. கட்டுமானத் தொழிலாளர்கள் பணப்பயன்கள் பெறுவதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பை கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திண்டுக்கல் தலைமைத் தபால் நிலையம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தினர். இதில் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.தீத்தான், புஷ்பம் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.