பெங்களூரு அருகே பலத்த மழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு ஒசக்கோட்டை தாலுகா திருமலாஷெட்டிஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு பணி நடைபெற்று வருகிறது. அங்கு பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பு அருகேயே சிறிய ஷெட்டுகள் அமைத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் வழக்கம்போல் வேலை முடிந்து நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை திடீரென அருகிலிருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளிடையே சிக்கி ஷெட்டில் படுத்திருந்த 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமலாஷெட்டிஹள்ளி போலீசார் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சதம்(35), ராமக்குமார்(25), நிதீஸ்குமார்(22) என அடையாளம் காணப்பட்டனர். மற்றொரு தொழிலாளியை அடையாளம் காணப்படமுடியவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில் மண்டல், சம்பு மண்டல், திலீப், துர்கேஷ் என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் கூறுகையில், பெங்களூருவில் நேற்று இரவிலிருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.