கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (35). இவர் கோவை ஜி. என். மில்ஸ் வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி இருந்தார். அவரை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் 3 பணிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படையினர் இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜான் ஜெபராஜ் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் மூணாறில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். மேலும் அவர் மேலும் சில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் ஜான் ஜெபராஜ் ஆஜர்படுத்தப்பட்டு அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க காவல் துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்