கோவை, ஜன. 19 - கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக ஒப்பந்த உரிமையை சூயஸ் நிறுவனத்திடமிருந்து ரத்து செய்யும் வரை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.
சூயஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் வி. இராமமூர்த்தி, சி.பத்மநாபன் உள்ளிட்டோர் கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் வியாழனன்று மனு அளித்தனர்.
இதனையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவை மாநகர மன்றம் தேர்வு செய்யப்படாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில், கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனை கண்டித்து கோவையின் அனைத்து பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றைய தினம் எதிர்க்கட்சி என்ற முறையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து நின்று சூயஸ்க்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தோம். பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் இடத்தில் சூயஸ் நிறுவனத்தினால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தோம். போராட்டத்தில் ஈடுபட்டோம். கோவை நகரத்தின் குடிநீர் என்பது அரசினுடைய குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவே விநியோகம் செய்யப்பட வேண்டுமே தவிர தனியார் நிறுவனங்களால் செய்யப்பட கூடாது. இதுபோன்று இந்தியாவிலேயே எந்த நகரத்திலும் இல்லை என்ற நிலையில், கடந்த அதிமுக அரசு கோவையில் இந்த ஏற்பாட்டினை செய்தனர். ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல், திமுக தேர்தல் அறிகையில் கூறியது போல திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்பதை கூறியுள்ளனர். திமுக மக்கள் நல அரசாங்கமாக செயல்பட்டு வருகின்றது என்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வது, மக்களுக்கு விரோதமான சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றார்.
முன்னதாக கோவை மாநகராட்சி துணை ஆணையரிடம் அளித்த மனுவில், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் மக்களுக்கு விரோதமான அம்சங்களே நிறைந்துள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் குடிநீர் கட்டணம், இணைப்பு கட்டணம் பன்மடங்கு உயரும். எல்லாவற்றிற்கும் மேலாக குடிநீர் வினியோகத்தில் கூட தனியார் கொள்ளை அடிப்பார்கள். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தை சொந்த பொறுப்பில் வழங்கிட வேண்டும். என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.