மேட்டுப்பாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், நடூர் பகுதியில் இருந்த வீடு இடிந்து விழுந்து சேதமானதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைகாற்றுடன் கனமழை பெய்து வந்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளநீரும் பெருக்கெடுத்து ஓடியது.
அதுமட்டுமின்றி, மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சங்கர் நகர் பகுதியில் 3 மின்கம்பங்கள் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை காரணமாக முறிந்து விழுந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றி, மின் இணைப்பை சீரமைத்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 ஆவது வார்டு நடூர் முனியப்பன் கோவில் வீதியில் இடியும் நிலையில் இருந்த பயன்படுத்தப்படாத வீடு தொடர் கனமழையின் காரணமாக இன்று(03.11.24) அதிகாலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் எவரும் வசிக்காததால் சேதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், சம்மந்தப்பட்ட அரசு துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.