பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 8.400 கிலோ கஞ்சா மற்றும் 3.100 கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா, பான மசாலா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கும் விதமாகக் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் நேற்று இரவு தாத்தூர் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த 8.400 கிலோ கஞ்சா மற்றும் 3.100 கஞ்சா சாக்லெட் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
பின்னர் விசாரணை செய்ததில் பீகாரைச் சேர்ந்த முகம்மது சகப்தீன் (50) அவரது மகன் ஆரிப் ராஜா (20) கல்லூரி மாணவர் என்பது தெரிந்தது. பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவைக் கோவைக்குக் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சாவைக் கடத்திக் கொண்டு பொள்ளாச்சி வழியாகக் கேரளாவில் விற்பனை செய்வதற்குக் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து தந்தை மற்றும் மகன் மீது ஆனைமலை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் முகம்மது சகப்தீன் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது