கோவை, ஆலாந்துறை பூண்டி மலைப் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் செம்மேடு பகுதியில் பாக்கு தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் 20க்கும் மேற்பட்ட வனத் துறையினர் யானையைக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ஆலாந்துறை அடுத்த செம்மேடு கிராமப் பகுதிக்குள் அதிகாலை பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்ததால் போலுவாம்பட்டி வனத்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இரு பகுதி நின்று விரட்டும் போது ஆறு யானைகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர் மீதமுள்ள நான்கு யானைகள் மற்றும் குட்டி உடன் மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்தில் புகுந்தது. இதையடுத்து யானைகளைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை வனத்துறையினர் தீவிரப் படுத்தினர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தோட்டத்தில் சுற்றியும் நின்று மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்கவும், பொதுமக்கள் உள்ளே செல்லாமல் இருக்கவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் குட்டி உடன் இருப்பதால் அதனை விரட்டும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. குட்டிக்கு அரணாய் 3 யானைகள் சுற்றி நிற்கும் நிலையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்
மேலும் வெள்ளிங்கிரி கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு வந்து செல்வதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியதோடு, கோவிலுக்குச் செல்லும் வழியிலும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.