திருவள்ளூர், ஜன.22- வடசென்னை அனல் மின் நிலையத்தில் பொது சேம நல நிதி, விடுப்பு சரண்டர் செய்து வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவை கடந்த 6 மாதமாக வழங்காததை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் புதனன்று (ஜன.22) தொழிலாளர்கள் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5அலகுகளில் நிலக்கரி எரியூட்டப் பட்டு 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1200க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் நிரந்தர பணியாளர்களாக வும், 1000க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு பொது சேம நல நிதி, விடுப்பு சரண்டர் செய்து வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவை கடந்த 6 மாதங்க ளுக்கு மேலாக வழங்கப்படவில்லை என்றும், தங்களது சேமிப்பு பணத்தை அத்தியாவசிய தேவை களுக்கு வழங்க நிர்வாகம் மறுப்பதாக அனல் மின் நிலைய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்களது குடும்பத்தில் திருமண செலவு, மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பித்துள்ள தொழிலாளர்க ளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் நிதி வழங்கப்பட வில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் டி.ஜெயசங்கர் பேசுகையில், ‘ஆண்டிற்கு ரூ.2500 கோடி வருமானம் ஈட்டி வந்த அனல் மின் நிலையங்கள் அரசின் தவறான நிர்வாக மேலாண்மையால் தற்போது சிதைந்து உள்ளது. எனவே அரசு உடனடியாக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வில்லை என்றால் தொடர் பேராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார். இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் எஸ். சுந்தரம் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள் கே.வெங்கட்டையா, இ.ஜெயவேல், ரவி, வெங்கடேசன் உட்பட பலர் பேசினர்.