ஊத்துக்கோட்டை,பிப்.17- பவுர்ணமி பூஜையில் பங்கேற்ற பொறியியல் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பென்னலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள்கள் மகேஸ்வரி, ஹேமமாலினி (20). ஹேமமாலினி தொழுவூரில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மகேஸ்வரிக்கு கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள மெதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மகேஸ்வரி ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டையில் ஆசிரமம் நடத்தி வரும் முனு சாமியிடம் சிகிச்சை பெற்றார். அவர் வாரத்துக்கு இருமுறை மூலிகை சார் மற்றும் இதர மருந்துகள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பவுர்ணமி பூஜையை யொட்டி மகேஸ்வரி தனது தங்கை ஹேமமாலினியுடன் முனுசாமியின் ஆசிரமத்திற்கு சென்று தங்கினார். அங்கு மாணவி திடீரென ஹேமமாலினி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்து வனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரிய வில்லை. இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹேமமாலினியின் பெற்றோர் பென்னா லூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்ததும் ஆசிரமத்தில் இருந்த சாமியார் முனுசாமி தலைமறைவாகி விட்டார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தேடிவருகின்றனர்.