districts

துப்பாக்கி முனையில் தொடர் கொள்ளை

விழுப்புரம், ஏப். 19- திண்டிவனம் பகுதியில் துப்பாக்கி முனையில் நடைபெற்ற தொடர் கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் (53). இவர் ஞாயிற்றுக் கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பிலவேந்திரன் வீட்டு முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் அலறினர். இருப்பினும், துப்பாக்கியை காட்டி மிரட்டியபடி பிலவேந்திரன் குடும்பத்தினரிடம் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தருமாறு கேட்டது. அதற்கு அவர்கள் மறுத்தனர். இதனால் பிலவேந்திரன் மற்றும் அவரது மகன் அருண்குமார் (31) ஆகிய 2 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் பறித்துக் கொண்டு தப்பி சென்றது.

இதனையடுத்து அந்த கும்பல் மயிலம் ஜக்காம்பேட்டை பகுதிக்கு சென்று குமார் (24) என்பவரின் வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடியது. அதே பகுதியில் ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வரதராஜ் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிமுனையில், எல்இடி டிவி-யை தூக்கி சென்றது. அதன்பின்னர் லோகநாதன் என்பவரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்ததால் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் அவர்களிடம சிக்கவில்லை. இதன்தொடர்ச்சியாக மயிலம் கண்ணிகாபுரத்திற்கு சென்ற அந்த கும்பல் அதிமுக கிளை செயலாளர் ஞானசேகரன் வீட்டிற்குள் புகுந்தது. அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த முகமூடி கும்பலை சேர்ந்த 4 பேரும், வந்த காரை அங்கே விட்டு விட்டு, திருடி வந்த பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து மயிலம் மற்றும் திண்டிவனம் காவல் நிலைய காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.