காஞ்சிபுரம், பிப்.17 - புனரமைப்பு செய்யப்பட்ட குருவிமலை நடுநிலை பள்ளி வகுப்பறையை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு (பிப்.17) திங்களன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலை நடு நிலைப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பூச்சு சில மாதங்களுக்கு முன் விழுந்தது. அந்த கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து புனரமைப்பு பணியை தொடர வேண்டும் என சிபிஎம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று புனரமைப்பு பணிகள் தொடர்ந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் புனரமைப்பு பணியிலும் முறைகேடு என புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஒப்பந்ததாரரை அதிரடி யாக மாற்றி வேறு ஒப்பந்ததாரரை ஒப்பந்தம் செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து புனரமைப்பு செய்யப்பட்ட பள்ளி வகுப்பறைகளை காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா வழங்க, குருவிமலை நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.பரவை பெற்றுக் கொண்டார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம், பொறியாளர் சுப்புராஜ், ஒப்பந்ததாரர் முகுந்தன், வார்டு உறுப்பினர் கே.என்.கண்ணன், கிளைச் செயலாளர் வேலு, ரமேஷ், முருகன், ஞானசம்பந்தம், விரிகிருஷ்ணன், பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் கூறுகையில், தினமும் பள்ளிக்கு குழந்தைகளை அச்சத்தோடு தான் அனுப்பி வந்தோம். ஆனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையிட்டு பள்ளி வளாகத்தை சீர் செய்துள்ளனர். இதன் பொருட்டு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.