districts

img

வாழ்வாதாரத்தை அழித்து சொகுசு பூங்காவா?

சென்னை, டிச. 24 - மெரினா கடற்கரையில் அமைய உள்ள நீலக்கொடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று (டிச.24) நொச்சிக்குப்பம் மீன்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் காந்தி சிலை முதல் நொச்சிக்குப்பம் பவானி அம்மன் கோவில் வரை நீலக்கொடி எனும் ப்ளு ஃபிளாக் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. அதாவது கடற்கரையோரம் உள்ள மீனவர்களின் கட்டுமரம், பைபர் படகு, வலைகளை அகற்றப்படும். அந்தப் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்காக நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கடலில் குளித்துவிட்டு வந்து ஓய்வெடுக்கும் வகையில் வணிக நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவர்கள் லூப் (இணைப்புச்) சாலையில் சுமார் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மீனவ பெண்மணி ஒருவர், “முதலில் லூப் சாலையில் சென்று வர அனுமதி கேட்டனர். பிறகு நெரிசல் நேரங்களில் மட்டும் வாகனங்கள் சென்று வர அனுமதி கேட்டனர். அதன்பிறகு சாலையை செப்பணிட அனுமதி கேட்டனர். பிறகு சாலையை பறித்துக் கொண்டனர். அதன்பிறகு சாலையோர மீன்கடைகளை அகற்றினர். இப்போது எங்களின் வாழ்வாதாரமான கடற்கரையையும் அபகறிக்க முயற்சிக்கின்றனர். அடுத்து நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை இருக்கைகளை அமைக்க உள்ளனர். கடற்கரையில் உள்ள படகுகள், வலைகளை எங்கே கொண்டு சென்று வைக்க முடியும்? சுற்றுலா என்ற பெயரில் மீன்பிடிக்க தடை விதிப்பார்கள். அதன்பிறகு குடியிருப்புகளையும் அகற்றுவார்கள். இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த போராட்டத் தகவலையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, டிச.26 அன்று மாநகராட்சி மேயரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஊர் கூட்டத்தில், காந்தி சிலை முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். காந்தி சிலை முதல் நொச்சிக்குப்பம் வரையிலான நீலகொடி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில், சாந்தோம் சாலையை மீண்டும் இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும்.  மாநகராட்சி அமைத்துள்ள நவீன மீன்அங்காடியை அகற்றிவிட்டு அங்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். மீனவர்களை மீண்டும் சாலையோரம் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.