சென்னை, அக்.1- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி யின் சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியா ளர்கள், 2,317 ஒப்பந்தப்பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 229 கையினால் இயங்கும் புகை பரப்பும் எந்திரங்கள், 8 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்க ளில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் எந்திரங்கள் கொண்டு கொசுக் களை கட்டுப்படுத்த பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசுப் ப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு நபர்கள் என 200 வார்டுக ளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 2 நபர்கள் என நாள் ஒன்றுக்கு 1 கி.மீ. தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்க வேண்டும். மேலும், 247 கி.மீ. நீர்வழித் தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர் கள் ஒரு குழுவிற்கு 3 நபர்கள் என நீர்வழித்தடங்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். குடிசை பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகை பரப்பும் எந்திரங்கள் கொண்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7.30 வரையிலும் புகை பரப்பும் எந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10 லட்சத்து 97 ஆயிரத்து 632 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.