சென்னை, ஏப்.3- உலக பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ‘தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக் கூடியது மற்றும் வெல்லக்கூடியது’ என்ற தலைப்பில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை நடத்தியது. பெருங்குடல் புற்றுநோய் இப்போது மிகவும் பரவலாக உள்ளது. எளிய மற்றும் பயனுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? என்று இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூறப்பட்டது. 2022 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்களி டையே பெருங்குடல் புற்றுநோய் வருடாந்திர தாக்கும் விகிதம்) முறையே 1,00,000க்கு 4.4 மற்றும் 4.1 ஆகும். பெண்களில் பெருங்குடல் புற்றுநோய், 100,000க்கு 3.9 என்ற விகிதத்தில் உள்ளது. ஆண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் 8-ஆவது இடத்திலும், மலக்குடல் புற்றுநோய் 9-ஆவது இடத்திலும் உள்ளன. மூன்று நாள் நிகழ்ச்சியில், டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை குடல் இரைப்பை நிபுணர் டாக்டர் ஆதர்ஷ் சுரேந்திரநாத், பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை விரிவாக எடுத்துரைத்தார். குடல் இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் ரத்தினசாமி, அறுவை சிகிச்சை நடைமுறை, அதன் நன்மைகளை விளக்கினார். மேலும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜோசப் டோமினிக், 4-ஆவது நிலை பெருங்குடல் புற்றுநோய்க்குகூட எவ்வாறு முழுமையான சிகிச்சையளிக்க முடியும்? எனப் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளக்கினர்.