கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்
வந்தவாசி, ஜூன் 4- வந்தவாசி அருகே ஆந்தி ரவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரக் கோணம் வழியாக ரேசன் அரிசி தொடர்ந்து கடத்தப் பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக கூடுதலாக காவல் துறையினர் மற்றும் வருவாய் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை பகுதியில் ரேசன் அரிசி மினி லாரியில் கடத்திச் செல்வதாக பறக்கும் படை வட்டாட்சியர் இளஞ் செழியனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழி யாக சென்ற மினி லாரியை மடக்கினர். அப்போது அதில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். லாரியை சோதனை செய்தபோது அதில் 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரி மற்றும் அதி லிருந்த அரிசியை பறிமுதல் செய்தனர்.
அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
கடலூர், ஜூன் 4- கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது மாவட்ட ஆட்சியரின் பழைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, குரலிசை (வாய்ப்பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர ஆண்டுக்கு ரூ, 350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். தற்போது, 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ,400 வழங்கப்படுகிறது. மேலும், இலவச பேருந்து பயண அட்டை, அரசு விடுதி, சலுகைக் கட்டணத்தில் புகை வண்டி பயண வசதி, உள்ளிட்டவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன. 3 ஆண்டு சான்றிதழ் படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இசை பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் நாதஸ்வர கலைஞராகவும், தவில் கலைஞராகவும், தேவார ஓதுவார் முதலிய பணிகள் பெற்றிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
கடலூர், ஜூன் 4- கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 16) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. வரும் 10ஆம் தேதி கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த முகாமில் பங்குபெற தகுதியின் அடிப்படையில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் உள்ளிட்டவை படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.