districts

அம்பேத்கர் சட்ட பல்கலை. மசோதா தாக்கல்

சென்னை, மே 5- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (மே5) கேள்வி நேரத்திற்கு பிறகு, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தாக்கல் செய்தார். அதில், 1949 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகச் சட்டம் மற்றும் 1991 ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழங்கள் சட்டத்தில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரத்தை கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக் கழங்கள் சட்டத்தின்படி துணை வேந்தர் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் நியமிக்கப்படுதல் வேண்டும். மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவானது, துணைவேந்தரின் நியமனத்தில், அரசின் பங்கை உறுதி செய்யும் வகையில், 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய பரிந்துரைத்துள்ளது. எனவே, மேற்சொன்னவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழங்களின் துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரமளித்து மேற்சொன்ன தமிழ்நாடு சட்டத்தை திருத்தம் செய்வது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இந்த சட்டமுன்வடிவு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா நிறைவேற்றப் பட்டதும் சட்டப் பல்கலைக் கழத்தின் வேந்தர் என்பவர் அரசு (முதலமைச்சர்) என்றும் அவர் என்ற துணை வேந்தர் (அமைச்சர்) அவர்கள் என்றும் மாற்றப்படும்.