districts

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சு போட்டி

விழுப்புரம், மார்ச்.9- தேச தலைவர்களின் பிறந்தநாளில் பேச்சு போட்டி நடத்த அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளில் பேச்சு போட்டி நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்டத் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி  அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஏப்.19 அன்று முற்பகல் 10 மணிக்கு நடைபெறுகிறது.  பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு தனித் தனியாக பேச்சுப் போட்டி நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாகத் தொகை ரூ.2,000 வீதமும் வழங்கப்படும். இந்த அறிய வாய்ப்பை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது அறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.