செங்கல்பட்டு,டிச.21- மாவட்டங்கள் தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திரு விழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து இதனை நடத்த இருக்கிறது. புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் 4.01.2023 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கிறது. புத்தக அரங்குகள், கலை அரங்கம், உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்து கொண்டு சிறப்பாக இருக்கின்ற சிந்தனை அரங்கம் ஆகியவற்றுடன் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு புத்தகத்திருவிழாவில் கோளரங்கம், புத்தக வெளியீடுகள், மாணவ-மாணவியருக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பம் சங்களாகும். சிந்தனையை தூண்டும் சிறப்புப் பேச்சாளர்களாக பேராசிரியர்கள் காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்தா, இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ண குமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர். செங்கை புத்தகத் திருவிழாவில் ‘செஸ்’ புகழ் தம்பியின் சின்னம் வெளியிடப்படுகிறது.