அரியலூர், மே 13 - அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் அமுத் சுரபி எனப்படும் சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை கட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என நூற்றுக்கணக்கானோர் தின சேமிப்பு என்ற முறையில் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் அச்சங்கத்தில் சேமித்து வருகின்றனர். சேமிப்பு பணத்தை வசூல் செய்வதற்காக பணியாளர்களும் சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் இடத்திற்குச் சென்று வசூல் செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசூல் செய்வதற்கு யாரும் வராத நிலையில், நிதி நிறுவனமும் பூட்டப்பட்டது. இதுகுறித்து அமுத்சுரபி தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. மேலும் நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, பொதுமக்களிடம் கட்டும் பணத்திற்கு உத்தரவாதம் அளித்த நபரும், ‘பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என விலகிக் கொண்டதால், பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து டெபாசிட் செய்த பொதுமக்கள் மற்றும் தின சேமிப்பு பணம் கட்டிய மக்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “இந்த நிதி நிறுவனத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தின சேமிப்பு-டெபாசிட் என்ற பெயரில் பல லட்ச ரூபாய் சேமித்து உள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டு உள்ளதால், இதுகுறித்து நிதி நிறுவனத்திடம் இருந்து எவ்வித முறையான பதிலும் வரவில்லை. பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக தெரிய வருகிறது. மேலும் நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்ட காசோலை, நிதி நிறுவனத்தின் கணக்கில் பணம் இல்லை என திரும்பி உள்ளது. இதனால் நாங்கள் பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.