தமிழக அரசை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், எரிவாயு சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தப்படி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன், தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜா நகர கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஐயப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் தமிழக அரசு இன்னும் 1 வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.