districts

img

அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

திருவள்ளூர், டிச 12- தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்து வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை முழு அளவில் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் திரட்டி வெற்றி பெறச் செய்வதற்கான மாநாடு திருவள்ளூரில் ஞாயிறன்று (டிச. 12) நடைபெற்றது.  இதற்கு ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஜி.ஜெயபால் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் என்.நித்தியானந்தம் வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தொமுச மாவட்டச் செயலாளர் நாகூர் கனி, காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரவி, ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் சேவியர், மாநில துணைத் தலைவர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் தாமோதரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் கஜேந்திரன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட துணைத் தலைவர் அன்பு, எல்டியுசி மாநிலத் தலைவர் ஏ.எஸ்.குமார், மாவட்டத் தலைவர் எஸ்.ஜானகிராமன் ஆகியோர் பேசினர். உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்,

தொழிலாளர் நல சட்டத் தொகுப்பை நான்காக மாற்றாதே, தேசிய பணமாக்கும் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயரிலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும்,  வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7500 நிவாரணமாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும், இதனை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும், கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கம் செய்ய வேண்டும், ஏற்கனவே இயங்குகிற மாநில நலவாரியங்களை சீர்குலைப்பது கைவிட வேண்டும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகிப்பது, வியாபாரிகள் சங்கங்களிடம் ஆதரவு திரட்டுவது, சங்க வித்தியாமின்றி சிறு குறு நிறுவன உரிமையாளர்களையும், அனைத்து தொழிலாளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.