districts

மதுரை முக்கிய செய்திகள்

மக்கள் சந்திப்பு இயக்கம்

திருநெல்வேலி செப் 3- திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது, 55-ஆவது மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் தலைமை வகித்தார், மாநிலச் செயற்குழு உறுப்பினர்  க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் பேசினர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். சுடலைராஜ், எஸ்.பெருமாள், பீர் முஹமது ஷா,  தாலுகா செயலாளர் நாராயணன், மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் குழந்தைவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள்  ஆர்.முருகன், கு.பழனி,ஜோதி, கந்தசாமி, பி.எம்.முருகன், கீதா, துரை கிறிஸ்டோபர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க  சிறப்பு முகாம்

  திருநெல்வேலி செப் 3- வாக்காளர் அட்டையுடன் தார் எண்ணை இணைக்க  சிறப்பு முகாம்  திருநெல்வேலி மாவட்டத்தில் 1,483 வாக்குச்சாவடி களிலும்  இன்று (ஞாயிறு)  காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்க ளும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தங்கள் முகவரிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தங்களது ஆதார்  மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்று  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் படிவம் 6- பி பூர்த்தி செய்து தங்களது ஆதார் அட்டை விவரங்க ளை முன்வந்து http://www.nvsp.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அல்லது Play store-ல் Voter’s Help Line App-ஐ பதிவிறக்கம் செய்து ஆதார் அட்டையை  வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். இந்த வாய்ப்பை தகுதி உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

ரயில்வே பணிக்கு பயன்படுத்திய கிரேன் திருட்டு 

தூத்துக்குடி,  செப்.3- தூத்துக்குடியில் ரயில்வே பணிகளுக்காக வைத்தி ருந்த 12 டன் கிரேன் திருடு போனது. தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக பயன்படுத்தி வந்த 12 டன் ஹைட்ரா லிக்  கிரேன் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டார்களாம்.  இதன் மதிப்பு ரூ.8 லட்சம். சேலத்தைச் சேர்ந்த  சந்துரு (23)  சிப்காட்  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கிரேனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

வாலிபர் பலி

தூத்துக்குடி, செப்.3- தூத்துக்குடி ஜெயலாணி தெருவைச் சேர்ந்தவர் முத்தாலி (27) இவர் வீட்டு மாடிப் படியில் இருந்து இறங்கி வரும்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல்  இறந்தார். 

தூத்துக்குடி துறைமுகத்தை பார்க்க அனுமதி

தூத்துக்குடி, செப்.3- தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் செப்.5-ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை  பார்வையிடலாம் என துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து பலி
தூத்துக்குடி, செப்.3- தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் கிருஷ்ண லட்சுமி (21). இவர்  வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது மின்சாரம் பாய்ந்து  பலத்த காயம் அடைந்தார். திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.  சேரகுளம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில் ஒருவர் பலி

தூத்துக்குடி, செப்.3- தூத்துக்குடி மாவட்டம், புதூர் அருகேயுள்ள நாகலாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கு ராமசாமி மகன் சரவணன் (31), இவரது நண்பர் புதூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சக்தி மாரீஸ்வரன் (22) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் அருப்புகோட்டை சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். புதூர் அருகே அருப்புக்கோட்டை பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சரவணன், மாரீஸ்வரன், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த வடக்கு முத்தையாபுரத்தைச் சேர்ந்த ராஜகுருநாதன் மகன் விக்னேஷ (27), கண்ணன் மகன் சரவணன் (20) ஆகிய நான்கு பேரும் காயம் அடைந்தனர்.  அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்  சரவணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார்.

காப்பீட்டு தொகை வழங்க உத்தரவு

திருவில்லிபுத்தூர். செப். 3-  இராஜபாளையம் வட்டம் தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் இவர் 25 .11 .2020 அன்று கட்டிட வேலைக்காக ஊரிலிருந்து செல்லும் போது முருகன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் இறந்தார்.  இவர் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியில் தனிநபர் காப்பீடு எடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கில் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டி.சேகர், 9 சதவீத வட்டியுடன் காப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார்.

ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி துறைகளை மூடுவது  மாணவர் நலனுக்கு புறம்பானது: எஸ்.எப்.ஐ

நாகர்கோவில் செப்.3- கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் குறிப்பிட்ட துறைகளை மூட வெளியிட்ட உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  எஸ்.எல்.அஜீஷ், மாவட்டச் செயலாளர் கா.முஹமது முஃபீஸ், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.சந்துரு ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளிகளில் குறிப்பிட்ட  17 பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என் காரணத்தைக் கூறி சில துறைகளை நிரந்தரமாக மூட உத்தரவு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது தங்களது விருப்பத் துறையை தனது இருப்பிடத்தின் அருகாமையில் இருக்கும் பள்ளிகளிலேயே கற்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மூடல் உத்தரவு அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. ஆசிரியர் இல்லை என்ற காரணத்தால் மொத்தமாக சம்பந்தப்பட்ட துறைகளை நிறைந்தரமாக மூடுவது மாணவர் நலனுக்குப் புறம்பானது. மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் இல்லாத துறை, வகுப்புகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மூடப்போவதாக கூறப்படும் துறைகளை மீண்டும் பழைய நிலையில் இயக்க வழிவகை செய்ய வேண்டும்  எனக் கூறியுள்ளனர். ஆய்வு துணை இயக்குநர், விதைச்சான்று உதவி இயக்குநர், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், விதை ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக்  கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் பங்கேற்பு

நாகர்கோவில் செப்.3- தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு  கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதியரசர் டி.முருகேசன் தலை மையில் குழு அமைத்துள்ளது. இந்தக்குழு  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில்  கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி   அறிமுக உரையாற்றினார்.  மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகம் கல்விக் கொள்கையின் அவ சியம் குறித்துப் பேசினார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் மேனாள் முதல்வரும் கல்வியாளருமான முனை வர் ஜேம்ஸ் ஆர், டானியல் புதிய கல்விக் கொள்கை எந்த வடிவங்களில் அமைய வேண்டும் என்பது குறித்து கருத்துரையாற்றினார். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முதல்வர் எட்வட் , மாவட்ட பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் சிந்து குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, தலைமையாசிரியர்கள் சார்பாக வள்ளி வேலு, .கண்ணன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சார்பாக பென்னட் ஜோஸ், குமரி ஆதவன், பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக பெனின் தேவகுமார், தொடக்கப்பள்ளிகள்  சார்பாக நாகராஜன், தியாகராஜன், தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் சார்பாக சசிக்குமார், மாணவர் பிரதி நிதிகள் சார்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முகமது முஃபீஸ், பள்ளி மாணவர்கள் சார்பாக வித்யா ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். மாநில கல்வி கொள்கை சார்ந்து தங்களின் கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளை  பொதுமக்கள்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள், மாண வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பி னர்கள், தனியார் பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் state educationpolicy@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். Centre for Excellence, Building- 3-ஆவது தளம் களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600025 என்ற முகவ ரிக்கு கடிதம் வாயிலாகவும் தெரிவிக்க லாம்.

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து  46 குளங்களுக்கு தனிக்கால்வாய் அமைக்க கோரிக்கை

திருநெல்வேலி, செப்.3- திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக வந்திருந்த நீர்ப்பா சனத்துறை அமைச்சர் துரைமுருகனை, நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:- வடக்கு பச்சையாறு அணையில் இருந்து நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் செழிப்பாக இருந்தாலும், தனிக்கால்வாய் இல்லாததால்  46 குளங்க ளும் வருடம் முழுவதும் வறண்டு காணப்படு கிறது. இதனால்  விவசாயிகளின் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளது. தனிக்கால்வாய் அமைத்து 46 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சுமார் 75 ஆயிரம் விவசாயிக ளின் வாழ்வாதாரம் செழிக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் 46 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டுவருவது குறித்து ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயி களின் நலன் கருதி  கோரிக்கையை நிறை வேற்றித் தரவேண்டும் எனக் கூறியிருந்தார்.  மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், ஆய்வு செய்து திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

மதுரை ரயில் நிலைய  நடைமேடையில் பயணி  தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை, செப் 3-  மதுரை ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வெள்ளியன்று  அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த பயணிகள் ரயில்வே காவல்துறை யினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து   ரயில்வே காவல்துறையினர்  உடலை மீட்டனர். மேலும் ரயில்வே காவல்துறை  நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட நபர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இராமேஸ்வரம் வந்ததற்கான பயண சீட்டு இருந் துள்ளது. அதனைவைத்து அவருடைய ஆதார் மூலம் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.  மதுரையில் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் நடமாட்டம் உள்ள மைய பகுதியில் முதியவர் தற்கொலை செய்யும்வரை யாருக்கும் தெரியாத அளவிற்கு நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரை ரோந்து பணியில் முறையாக ஈடு படுத்துவது இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக  இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த  நிலையில் தற்போது  முதியவர் ஒருவர் தற்கொலை என அடுத்தடுத்து ரயில் நிலையத்தில் ஏற்படும் உயிரிழப்பு கள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை - செங்கோட்டை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்

மதுரை, செப்.3-  மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை - செங் கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத  சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேளாண்மைக் கணக்கெடுப்பு பணி

திருச்சிராப்பள்ளி, செப்.3 - இந்திய அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை  அமைச்சகத்தால் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் 11-வது வேளாண்மைக் கணக்கெடுப்பு - 2021-22 பணி,  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்று கட்டங்களாக நடத்தப் படுகிறது. திருச்சி மாவட்டத்தில், இக்கணக்கெடுப்புப் பணியினை மண்ணச்சநல்லூர் வட்டம், மாதவபெருமாள் கோயில் கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வியாழனன்று தொடங்கி வைத்தார். இக்கணக்கெடுப்பில், நில உரிமையாளர் மற்றும் கைப்பற்றுதாரர் எண்ணிக்கை மற்றும் நிலப்பகுதி பற்றிய  புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நில அளவு -  பிரிவுகள் - சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசா யிகள் கைப்பற்றுகளின் வகைகள், தனிக் கைப்பற்று, கூட்டுக் கைப்பற்று, நிறுவனக் கைப்பற்று, குத்தகை விவ ரம், நிலப் பயன்பாட்டு வகை, சமூக வாரியான ஆண்,  பெண் கைப்பற்றுதாரர்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. இக்கணக்கெடுப்பில் மூன்றாம் பாலின மான திருநங்கை கைப்பற்றுதாரர்கள் குறித்தக் கணக்கெ டுப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது. முதன் முறையாக, இக்கணக்கெடுப்பு, டிஜிட்டல்  முறையில் கிராம நிர்வாக அலுவலரால் மேற்கொள்ளப் பட உள்ளது. இக்கணக்கெடுப்பிற்காக, மாவட்ட அளவி லான பயிற்சி கடந்த 29 ஆம் தேதியும், வட்ட அளவிலான  பயிற்சி கடந்த 30 ஆம் தேதியும் வழங்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு 1.9.2022 முதல் 31.12.2022 வரை நடை பெற உள்ளது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் வலிப்பு ஏற்பட்டு மரணம்

இராமேசுவரம், செப்.3- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ளவர் சசிரேகா (35).  இவரது தந்தை யோகராஜா(62) கடந்த 1990 ஆம் ஆண்டு  இலங்கையில் இருந்து அகதியாக மண்டபம் வந்துள்ளார். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற நிலையில் 2022 ஆண்டு விமானம் மூலம் சென்னை  வந்த மகள் இருக்கும் மண்டபம் கேம்ப் இலங்கை தமி ழர்கள் முகாமில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மண்டபத்தை சேர்ந்த ஜெய்னுலாவு தீன் என்பவரது விசைப்படகில் யோகராஜா, பத்ம நாதன், பிச்சை ஆகிய 4 பேரும் புதன்கிழமை மீன்  வளத்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றுள் ளனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடுக்கட லில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் படகின் பின்பகுதி யில் இருந்த யோகராஜாவுக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளர்.  மயங்கிய நிலையில் இருந்தவரை பார்த்த சக மீனவர்கள் முதலுதவி செய்துள்ளனர். ஆனால்  உடம்பில் எந்தவொரு அசைவும் இல்லாத நிலையில் படகை கரைக்கு கொண்டு வந்து மண்டபம் கடலோர  பாதுகாப்பு குழும போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்  துவ பரிசோதனையில் யோகராஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

  

;