districts

img

தமிழகத்தில் 8 கோடியே 7 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்

விருதுநகர், டிச.21- தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 7 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது : இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு என மொத்தம் 69 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை சேர்ப்பதற்கான கட்டமைப்பு இங்கு உள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் உட்பட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இக்கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டே தொடங்க வேண்டுமென தமிழக முதல்வர் பலமுறை ஒன்றிய அரசுக்கு கடிதங்களை எழுதினார்.

1450 மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் வந்து கொண்டுள்ளன. 11 மருத்துவக் கல்லூரிகளையும் ஒன்றிய அரசின் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பங்கேற்று திறந்து வைக்கும் நிகழ்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. தேதி முடிவு செய்யப்பட்டதும், ஏதாவது ஒரு கல்லூரியில் இருந்து திறக்க உள்ளனர். முழுமையாக பணிகள் நிறைவடைந்த, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத, ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் உள்ள கல்லூரியாக விருதுநகர் மருத்துவக் கல்லூரி உள்ளது.  

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தெரிந்தவுடன் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 நாடுகளில் அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கும் குறைவான பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஈஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 98. அவர்களின் மாதிரிகள் தமிழக அரசின் மரபியல் ஆய்வுக் கூடம் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட ஆய்வுக் கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் 13 பேரின் முடிவுகள் வந்துள்ளது. அதில் ஒருவருக்கு தொற்று உள்ளது. 8 பேருக்கு டெல்டா வைரஸ் உள்ளது. அனைவரும் நன்றாக உள்ளனர். ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளானவரும் மிக நன்றாக உள்ளார். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாதிப்பு அதிகம் இருக்குமா? என்ற கேள்விக்கு, ஒமைக்ரான் தொற்று இருந்தால், தலைவலி, தலைச்சுற்றல், தொண்டை கமறல் போன்ற சிறிய அளவிலான பாதிப்பு தான் இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் பாதிப்பு ஏற்பட்டதும் வேகமாக 90 நாடுகளில் இந்த கிருமி பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், இரு தடுப்பு ஊசிகள் அதிகமாக போடப்பட்ட நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.ரஷ்யா, ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளில் தடுப்பூசிகள் குறைவாக போட்டுள்ளனர். அங்கு தான் இறப்பு விகிதம் தினசரி 1400 முதல் 1500 ஆக உள்ளது. இதற்கு தீர்வு தடுப்பூசி மற்றும் முகக் கவசம் தான்.எனவே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் சனிக்கிழமைகளில் வருவதால், இரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

தமிழத்தில் இதுவரை 8 கோடியே 7 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு மகத்தான சாதனை படைத்துள்ளோம். இதில், முதல் தவணை தடுப்பூசி 84 சதவீதம் பேரும் 2வது தவணை 55 சதவீதம் பேரும் போட்டுள்ளனர். 2வது தவணை தடுப்பூசியை 90 லட்சம் பேர் போட வேண்டியுள்ளது. பேரிடர் காலத்தில் பணியாற்றியவர்கள், புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட மருத்துவர்கள் டிசம்பர் 31 வரை பணி நீட்டிப்பு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணியாற்ற உள்ளனர். பேரிடரில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வரவில்லை. எனவே, பண்டிகை கால கட்டுப்பாடு தொடரும் என தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, கல்லூரி முதல்வர் சங்குமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

;