திருவண்ணாமலை,மே 19- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு நிபந்தனையற்ற கடன் வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் கா.யாசர் அராபத் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.வீரபத்திரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் அ.அப்துல் காதர் மற்றும் பலர் உரையாற்றினர். இந்த போராட்டத்தில் உரையாற்றிய மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், “தமிழ் நாட்டி லுள்ள சிறுபான்மை மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைக்காக, 2019 இல் வழங்கப்பட்ட மனுக்களின் தொடர்ச்சி யானதே இந்த போராட்டம்” என்றார். சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி அளிப்பதாக முகாம்கள் நடத்தி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கண்துடைப்பு நாடகம் நடத்தும் தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் முற்றுகைப்போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார். இப்போராட்டத்தின் முடிவில், வட்டாட்சியர் முருகானந்தத்தை சந்தித்து 131 நபர்களுக்கு கடனும், தையல் இயந்திரமும் வழங்கக் கோரி மனு கொடுத்தனர்.