புதுக்கோட்டை, ஜூலை 4 -
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலை யில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார்.
தென்னை நார்கள் மூலமாக தயார் செய்யப் பட்டு வருகிற துடைப்பான்கள், மகளிரால் உற்பத்தி செய்யப்படுகிற பனை ஓலைப் பொருட்கள் மற்றும் அவைகள் தயாரிக்கப்படுகிற பணிகளை தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் எஸ்.சுரேஷ்குமார் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பனை பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பயிற்சிகளை மேலும் அதிகரித்து உற்பத்தியினை பெருக்க வேண்டும் என்றார். பனைத் தூரிகை பிரிவில் மரக்கட்டைகள் தயார் செய்வதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்பு, மாநில இணைய சொந்த நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பனைத்தூரிகை, பனைக் கூடம் மற்றும் அலுவலகக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
துணை இயக்குநர்கள் (சென்னை) (காதி) அருணாச்சலம், பாலக்குமார், உதவி இயக்குநர் ரவிக் குமார், திட்ட அலுவலர் டி.மாரியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.