தஞ்சாவூர், ஆக.6 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கோரிக்கை மனு கொடுப்பதற்கு பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்தால், அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் செங்கிப்பட்டி அருகேயுள்ள வடுகன் புதுப்பட்டியைச் சேர்ந்த சிலர் சீருடை அணிந்த பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேருடன் வந்து, பேருந்து வசதி கோரி மனு அளித்து முறையிட்டனர். கோரிக்கைகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பைக் கெடுக்கும் விதமாக அவர்களை மனு கொடுக்க அழைத்து வருவது சரியல்ல. பள்ளியில் நடத்தப்பட்ட பாடத்தை இந்த மாணவ, மாணவிகளால் எப்படிக் கற்றுக் கொள்ள முடியும். இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். இனிமேல் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை செய்தார். அடுத்த சில நிமிடங்கள் கழித்து தஞ்சாவூர் மாநகராட்சி 2 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் க.அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள், சீருடை அணிந்த மாணவ, மாணவிகளுடன் வந்து தங்களது பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு அளிக்க வந்தார். இதனால், கோபமடைந்த ஆட்சியர் கடுமையாக எச்சரித்து மாமன்ற உறுப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அருகிலிருந்த அலுவலரிடம் அறிவுறுத்தினார். மேலும், மனு கொடுப்பதற்கு மாணவ, மாணவிகளை அழைத்து வந்தால், அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை செய்தார்.