districts

பேரளம் ரயில் நிலையத்தில் வேகன் இயக்கம் உடனடியாக செயல்பட வலியுறுத்தி சிஐடியு மறியல்

திருவாரூர், பிப்..26-  திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்-அரிசி வெளி மாவட்டத்திற்கு அரவைக்குக் கொண்டு செல்ல வேகன் இயக்கம் உடனடியாக செயல்படுத்தக் கோரி, சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பாக பேரளம் ரயில்நிலையம் அருகே, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்திற்கு பேரளம் குட்செட் தலைவர் ஜெ.மனோகரன் தலைமை வகித்தார். சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் மற்றும் சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.செல்வம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம் சேட்,பேரளம் குட்செட்  சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சிங்காரவேல், திருநாவுக்கரசு, ஆனந்த், ராஜகுரு உள்ளிட்ட ஏராளமானோர் சாலை மறியலில் கலந்து கொண்டு உடனடியாக ரயில்வே வேகன் இயக்கம் நடைபெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் மாவட்ட நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளரின் அறிவுறுத்தின்படி, துணை மேலாளர் அருள்ராஜ் சாலை மறியல் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் பேரளம் ரயில்வே நிலையத்திலிருந்து பிப்.27 ஆம் தேதியில் இருந்து மார்ச் வரையில் தொடர்ந்து வேகன் இயக்கம் நடைபெறும். முதல் கட்டமாக பேரளம் டு ராணிப்பேட்டை, பேரளம் டு திண்டுக்கல், பேரளம் டு ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு வேகன் அனுப்புவதாக எழுத்துப்பூர்வமாக எழுதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை அடுத்து, தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.