திண்டுக்கல்லில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த சேனான்கோட்டை துணை மின் நிலைய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேடசந்தூர் பகுதி விவசாயிகளிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் வேடசந்தூர் அருகே கெண்டையகவுண்டனூரை சேர்ந்த நடராஜ் என்பவருடைய மகன் தங்கவேல் தனது தகப்பனார் இறந்துவிட்டதாகவும் அவருடைய பெயரில் இருந்த மின் இணைப்பை, தன் பெயருக்கு மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார். அதற்கு உதவி மின் பொறியாளர் ரவிக்குமார், ரூ.10ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்கவேல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி, தங்கவேல் முதல் தவணையாக ரூபாய் ஆராயிரத்தை இரசாயனம் தடவி கொடுத்துள்ளனர். அதை கொடுக்கும் போது மாறுவேடத்தில் உடன் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் ரூபகீதாராணி, சார்பு ஆய்வாளர் சந்திரசேகர், தலைமையிலான ஏழு அதிகாரிகள், உதவி மின் பொறியாளர் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதனை தொடர்ந்து உதவி மின் பொறியாளர் ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளை ஏமாற்றி லஞ்சம் பெற்றதற்கான குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர்.