தருமபுரி, மே 13- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ் என்ற பெயரில் சலூன் கடை உள்ளது. இந்த கடை யை யோகேஸ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கெளாப்பாறை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் சஞ்சய் (17) என்பவர், யோகேஸ் வரன் சலூன் கடைக்கு சென்று முடி வெட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது யோகேஸ்வரன், “நீ எந்த ஊரு?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர், “நான் கெளாப்பாறை ஊரைச் சேர்ந்தவன்” என்று கூறியுள்ளார். பின்பு கடையின் உரிமையாளர் யோகேஸ்வரன், “உங்களுக்கு முடி வெட்ட முடியாது. நீ வேறு எங்கேயாவது வெட்டிக்கொள்” என்று திருப்பி அனுப்பி விட்டார். இதுகுறித்து சஞ்சய் தன் நண்பர்களிடம் நடந்தவற்றை கூறி, நண்பர்களை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்கு சென்று, என்ன கார ணத்திற்காக முடி வெட்ட மறுத்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு “உங்களுக்கு முடி வெட்ட முடியாது; அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார். ஆணவப்பேச்சு இதன்பின் யோகேஸ்வரனின் தந்தை கருப்பன் (எ) சின்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடம் இளைஞர்கள் கார ணத்தை கேட்டுள்ளனர். அதற்கு “உங்களுக்கு இப்போது மட்டுமல்ல, காலம் காலமாக முடி வெட்டுவதில்லை; இப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை” என ஆணவத்துடன்கூறியுள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சலூன் கடை உரிமையாளர் யோகேஸ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன், ஆகிய இருவரையும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிறன்று இருவரை யும் தருமபுரிக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடு இதனிடையே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், ஒன்றியச் செய லாளர் பி.குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பி.வி.மாது, கே.என்.ஏழுமலை, சங்கர், ஆகியோர் நடந்த சம்பவத்தை நேரில் கேட்டறிந்தனர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கோவில், சலூன் கடை, துணி சலவைக்கடை, தேநீர் கடை, கூலி வேலை செய்யும் இடங்களில் பட்டிய லின மக்களுக்கு தொடர்ந்து தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகிறது. எனவே, தீண்டாமையில் ஈடுபட்டால் சட்டப்படியான தன்டனை கிடைக்கும் என்பதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவேண்டும். மேலும், பட்டியலின கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.