சென்னை, ஜன. 30 - அரசு ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் வலியுறுத்தி உள்ளார். போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று (ஜன.30) பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கே. ஆறுமுக நயினார் கூறியதாவது: போக்குவரத்து கழகத்தில் 21 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 1800 பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு ஓராண்டாகியும் நிரப்பப்படாமல் உள்ளது. ஆனால் அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக உண்மைக்கு மாறாக கூறி வரு கிறார். பணியிடங்களை நிரப்பாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் முடங்கி கிடக்கின்றன. அதிமுக ஆட்சியில் பேருந்துகளை குறைப்பது உள்ளிட்ட 8 அரசாணைகளை வெளியிட்டது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் பணம் ரூ13ஆயிரம் கோடியை எடுத்து அரசு செலவிட்டுள்ளதை திரும்ப வழங்க வேண்டும். இதை கொடுத்தாலே பெரும்பாலான பிரச்சினை தீரும். ஓய்வூதியர்களுக்கு 100 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பிப். 7ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கிறோம். பேச்சு வார்த்தைக்கு முன்னதாக ஊதிய பேச்சு வார்த்தை குழு அமைத்து அரசாணை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். கோயம்பேடு பேருந்து நிலையம் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், ஒன்றிய அரசு கணக்கின்படி சென்னை நகர மக்கள் தொகைக்கு 6 ஆயிரம் பேருந்து களை இயக்க வேண்டும். ஆனால், 3200 பேருந்துகள்தான் உள்ளன. இந்த நிலையில் அவசர கதியில் கோயம் பேடு பேருந்து நிலையத்தை கிளாம் பாக்கத்திற்கு மாற்றி உள்ளனர். மாநகர பேருந்துகளையும் அங்கு மாற்றி உள்ளனர். இதனால் சென்னை நகரத்திற்குள் உள்ள மக்களுக்கு பேருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலம் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என்றார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். துரை தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பணியாளர் சம்மேளன தலைவர் நாகராஜ், அரசாங்க ஊழியர் போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ ஆர். பாலாஜி, துணை பொதுச்செயலாளர்கள் இளங்கோ, ராஜேந்திரன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் வீரராகவன் உள்ளிட்டோர் பேசினர்.